கல்வியியற் கல்லூரிக்கான வர்த்தமானி தாமதமாவதால் மாணவர் அனுமதியில் தாமதம்

கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுநர்களை இணைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படாததால், 2023/24 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் சித்திபெற்ற சுமார் 8ஆயிரம் மாணவர்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வி சேவைகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது .

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதால், குறித்த மாணவர்களுக்கும் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மிக மிரிஹான கூறியுள்ளார் .

புதிய கல்வி சீர்திருத்தத்தில் கல்லூரி மாணவர்களுக்கான பொருத்தமான பாடத்திட்டம் தயாரிக்கப்படாததால், வர்த்தமானியில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டம் தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்படுகிறது. எனினும் தற்போது அவர்களுக்கு அதற்கான யோசனை கூட இல்லை என்றும் ஆசிரியர் கல்வி சேவைகள் சங்கம்தெரிவித்துள்ளது.

70% பாடசாலை ஆசிரியர்கள் கல்வியியற் கல்லூரிகள் மூலமாகவே உருவாக்கப்படுகிறார்கள் என்றும், ஆட்சேர்ப்பில் ஏற்படும் இந்த தாமதம் காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஆசிரியர் கல்வி சேவைகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது .

தற்போது கல்லூரிகளில் பயிற்சி பெறும் மாணவர்களில் ஒரு குழு எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி பாடசாலைகளுககுஅனுப்பப்படும், மற்றுமொரு குழு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பாடசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கையை விரைவாக மேற்கொள்ளப்படாவிட்டால், அடுத்த ஆண்டு ஜூன் மாதமாகும் போது ஒரு குழுவேனும் கல்வியியற் கல்லூரிகளில் இல்லாத சூழ்நிலை ஏற்படும் என
ஆசிரியர் கல்வி சேவைகள்சங்கத்தின்செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மிக மிரிஹான
தெரிவித்துள்ளார்.