
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது.
நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை 2025 (2026) சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை குறித்துத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ள நேர அட்டவணையை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த வருடத்தை விட இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் பாட ஒழுங்கு ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களில் மாற்றப்பட்டுள்ளதால், சரியான நேர அட்டவணையை மாத்திரம் பயன்படுத்துமாறும் இந்திகா குமாரி லியனகே மேலும் வலியுறுத்தினார்.
இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும்.
பிற்பகல் வேளை பரீட்சை 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் பகல் 12.30 மணியளவில் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பரீட்சை நிலையங்களுக்குக் கையடக்கத் தொலைபேசிகள், புளூடூத் சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது எவ்வித ஆவணங்களையும் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
‘ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சை முடியும் வரை தமது ஆள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பாடசாலை பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தேவைப்படின் இரண்டு புகைப்படங்களுடன் கிராம உத்தியோகத்தர் மூலம் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம். பரீட்சார்த்திகள் விடையளிக்கத் தொடங்கும் முன் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து, அனைத்துப் பகுதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நேரத்தை சரியாக முகாமைத்துவம் செய்து, பரீட்சை சுட்டெண்ணைச் சரியாகக் குறிப்பிட்டு விடையளிக்க வேண்டும். கையெழுத்துத் தெளிவாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் திப்பெக்ஸ் பயன்படுத்தக் கூடாது. தவறு நேர்ந்தால் அதனை ஒரு கோட்டினால் வெட்டிவிட்டு மீண்டும் விடையளிக்க வேண்டும். விடைத்தாள்களைச் சரியாக இணைப்பதற்கு (நூலால் கட்டுவதற்கு) நடவடிக்கை எடுக்க வேண்டும். பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சார்த்திகள் சட்டதிட்டங்களைப் பேண வேண்டும் என்பதுடன், முகம் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும். வேறொரு பரீட்சார்த்திக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு நடந்துகொண்டால் சில சமயங்களில் பரீட்சை பெறுபேறுகளை ரத்துச் செய்ய நேரிடும். இடைவேளை நேரத்திலும் ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்’ எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
