கல்விச் சீர்திருத்தத்தில் குளறுபடி: எழுத்துப் பயிற்சிப் புத்தகம் நீக்கப்பட்டதற்கு திலித் ஜயவீர எதிர்ப்பு!

இளம் பிள்ளைகளின் எழுத்துப் பயிற்சியில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பயிற்சிப் புத்தகத்தை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இன்று  செவ்வாய்க்கிழமை  நாடாளுமன்றத்தில் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

புதிதாக முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் முழுவதையும் மீளாய்வு செய்ய வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தரம் 1 மற்றும் தரம் 2 மாணவர்களின் எழுத்துப் பயிற்சிக்காகப் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த (Pas Rule) விசேட புத்தகம் நீக்கப்பட்டுள்ளமை, மாணவர்களின் ஆரம்பக் கற்றலை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக சிங்கள மொழியைத் தெளிவாக எழுதப் பழகுவதற்கு இந்த Pas Rule புத்தகம் மிக அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைய முறைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய புத்தகத்தில் மாணவர்கள் எழுதுவதற்குப் போதிய இடவசதி இல்லை என்றும், அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால் பாடசாலைக்கு வெளியேயான பயிற்சி வாய்ப்புகள் குறையும் என அவர் தெரிவித்தார்.

தரம் 6 பாடப்புத்தகச் சீர்திருத்தத்தை மட்டும் வாபஸ் பெறுவது போதுமானதல்ல, முழு சீர்திருத்தச் செயற்பாட்டையுமே அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தவறான கொள்கைகளால் பல பில்லியன் ரூபா மக்கள் பணம் வீணடிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.