கல்முனை விகாரை துஸ்பிரயோக விவகாரம் : பிக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

-கல்முனை நிருபர்-

கல்முனை விகாரையில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாகவும், அதனை நான் தான் செய்ததாகவும் உண்மைக்கு புறம்பான பொய்யான செய்தியை எழுதி எனது மரியாதைக்கு அபகீர்த்தியை உண்டாக்கிய அந்த ஊடகவியலாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளேன், என கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை கல்முனை விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இன முறுகளை உண்டாக்கி அதனில் குளிர்காய நினைக்கும் குறித்த ஊடகவியலாளர் ஏற்கனவே பொய்யான செய்திகளை எழுதி நீதிமன்றத்தினால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டவர். இவரின் செய்தியினால் எனக்கு பலத்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இது போன்று தொடர்ந்தும் பொய்யான செய்திகளை வெளியிட்டு வரும் இவரின் செய்திகளை வெளியிட முன்னர் செய்திகளை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு செய்தி ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறேன்

கல்முனையில் ஒரு விகாரை இருப்பதாகவும் அந்த விகாரையின் விகாராதிபதியே சிறுவர் துஸ்பிரயோகம் செய்ததாகவும் எழுதியுள்ளார். இதன்மூலம் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் அபகீர்த்தியை உண்டாக்கி கல்முனையில் உள்ள விகாரையை அப்புறப்படுத்த சதி நடக்கிறதோ என்ற பயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்கள் அளவில் கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றித்து வாழ்கின்றேன், மக்கள் மீது எனக்கு அன்பும் அவர்கள் என் மீது மரியாதையும் வைத்துள்ளார்கள். இந்த செய்தி அந்த உறவில் விரிசலை உண்டாக்கியுள்ளது.

மாணிக்கமடு விகாரைக்கு கல்விகற்க சென்ற இளம் பிக்குகள் தலையிடிப்பதாக கூறி சுகயீனம் அடைந்ததும் அவர்களை நானே வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தேன்.

என்னை பொலிஸார் தேடுவதாகவும், சுற்றிவளைத்து வேட்டை நடத்துவதாகவும் செய்தியில் எழுதியுள்ளார். பிரதேச பொலிஸாரை நான் தொடர்புகொண்டு கேட்டபோது அப்படி எதுவும் இல்லை என்றும் எனக்கு எதிராக எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர்.

என்னுடைய விகாரையில் தான் நான் இருக்கிறேன். எங்கும் ஓடியொழிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.

இன முருகளை உண்டாக்கும் விதமாக கருத்து வெளியிடுமாறு கோரும் குறித்த ஊடகவியலாளர் இன்றும் என்னிடம் வந்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் கருத்து கூறுமாறு திணித்தார்.

நான் இன முரண்பாட்டை உண்டாக்கும் விதமாக கருத்து கூற முடியாது என மறுத்து திருப்பியனுப்பி விட்டேன்.

கடந்த காலங்களிலும் தமிழ்- முஸ்லிம் உறவில் விரிசல் வந்திவிடக்கூடாது என்பதற்காக போராட்டங்களிலும் கலந்து கொண்டேன். சமூக விடயங்களிலும் முன்வந்து குரல்கொடுத்தேன்.

என்னை வைத்து சதிவலை பின்ன முயற்சிகள் செய்யும் பணியை குறித்த ஊடகவியலாளர் செய்துள்ளார். இவரின் செய்திகளில் அதிகமானவை இன முரண்பாட்டை உண்டாக்குபவை என்பதை நான் அறிவேன்.

இவருக்கு எதிராக ஊடத்துறை உயரதிகாரிகள், செய்தி ஆசிரியர்கள், ஊடக அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் இவரின் செய்திகளில் நம்பகத்தன்மை இல்லாதமையினால் இவரது செய்திகளை உறுதிப்படுத்த முன்வர வேண்டும்.

அவர் எழுதியுள்ள சம்பவம் கல்முனை விகாரையில் இடம்பெறவில்லை. அது அப்பட்டமான பொய். சட்டநடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறேன்.

பொலிஸாரும் இந்த செய்தியின் தாக்க நிலையை கவனத்தில் கொண்டு அவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த முன்வரவேண்டும், இல்லாதுபோனால் இதனை பெரிய மட்டங்களுக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பேன், என்றார்.