கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்திய பரிசோதனை முகாம்

 

-அம்பாறை நிருபர்-

அவசரமான உலகில் துரித உணவுகளால் ஏற்படும் தொற்றா நோய்களை தடுக்கும் வகையில் “அனைவர்க்கும் ஆரோக்கியமான வாழ்வு” எனும் தொனிப்பொருளில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்திய பரிசோதனை முகாம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான இந்த தொற்றா நோய் தொடர்பான மருத்துவ பரிசோதனை முகாமில் கொலஸ்திரோல், உயர்/தாழ் குருதி அமுக்கம் , சர்க்கரை வியாதி , சிறுநீரகம் உட்பட பற்சிகிச்சை, கண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் இவற்றுக்கான ஆலோசனைகளும் வழங்கிவைக்கப்பட்டது.

இன்றைய உலக ஒழுங்கு மனிதர்களை அவசரமான வாழ்வியல் நிலைக்கு தள்ளியுள்ளது. ஆரோக்கியமான உணவுகளை தேடிப் பெறுவதில் பெருத்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் துரித, உடனடி உணவுகளை நுகர்கிற நிலை மேலோங்கியுள்ளது. இதன் விளைவாக தொற்றா நோய்களால் மருத்துவ உலகு திணறிப்போயுள்ளது. இதற்கான தீர்வுகள் மருந்துகளன்றி உணவுப் பழக்கமேயாகும் என்கிறது மருத்துவ உலகு. இன்றைய ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்றாற்போல் உணவுகளை உட்கொள்வதே இதற்கான முதற்தீர்வாக மருத்துவ உலகு பரிந்துரைத்துள்ளது.

எனவே இதனை மக்களின் காலடிக்கு கொண்டு சேர்ப்பதுவே சுகாதாரத் துறையின் பணி அதனையே நாமும் செய்கின்றோம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகார எல்லைக்குள் வசிக்கும் மக்களின் சுகாதாரம், உணவுப் பழக்க வழக்கம், தொற்றா நோய் போன்றவை தொடர்பில் அறிவுறுத்தி அதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றோம்.

அதன் ஒரு கட்டமாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு இந்த சேவையை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக வழங்குகின்றோம் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி ஷஹ்றா ஷராப்டீன் குறிப்பிட்டார்.

மேற்படி மருத்துவ பரிசோதனையானது கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பூரண ஒத்துழைப்பில் இடம்பெறுவதையிட்டு அவருக்கு எமது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் சார்பில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.