கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு நன்கொடை
பல தசாப்தங்களுக்குப் பின்னர், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு அசையாச் சொத்து ஒன்று வக்பு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! இந்த மகத்தான நன்கொடை கல்முனை இஸ்லாமாபாத் மண்ணில் ஒரு தாயின் ஆன்மீக அர்ப்பணிப்பையும், எதிர்காலச் சந்ததியினரின் மார்க்க கல்வி மீதான அசைக்க முடியாத அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
கல்முனை இஸ்லாமபாத் பள்ளி வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா ரபீக்கா உம்மா எனும் தாய், தனது சொந்த வளவை கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்காக வக்பு நன்கொடையாக அளித்துள்ளார். இவ்வக்பு நன்கொடை, இஸ்லாமபாத் பள்ளி வீதியில் வீதியோரம் அமைந்துள்ள 3.24 பேர்ச் பரப்பளவு கொண்ட வீட்டுடன் அமைந்த வளவாகும்.
இவ்வக்பு நன்கொடையின் மூலம், ரபீக்கா உம்மா அவர்கள் தனது காலத்திற்கு பிறகும் தமக்குப் பயன் தரும் ஒரு ஸதக்கதுல் ஜாரியாவை நிலைநாட்ட விரும்பி வக்பு நன்கொடையின் நோக்கத்தை தெளிவாக குறிப்பிட்டு வக்பு செய்துள்ளார். தனது மறைவிற்குப் பின்னர்,
குர்ஆன் கல்வியைப் போதிக்கும் ஒரு மத்ரஸா நிறுவப்பட்டு, அடுத்த தலைமுறையினர் இஸ்லாமிய அறிவோடு வளர வேண்டும்.
ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் மெளலீத் மஜ்லிஸ்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
தனது மரணத்தின் பின், வருடா வருடம் அவரது நினைவாகப் பள்ளிவாசல் மூலம் கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டு, துஆ பிரார்த்தனை செய்யப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கங்களுக்காக இவ்வளவை கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு செய்துள்ளார்.
இவ் ஆதன நன்கொடையினை பிரசித்த நொத்தாரிஸ் சிரேஷ்ட சட்டத்தரணி எம். எஸ் ரஸ்ஸாக் அவர்கள் முன்னிலையில் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் மற்றும் செயலாளர் முபாரிஸ் எம். ஹனீபா, உறுப்பினர் ஏ. எம். ஏ. லத்தீப் ஆகியோர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர்.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு அசையாச் சொத்து (காணி) ஒன்று வக்பாகக் கிடைக்கப்பெற்று பல தசாப்தங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்தத் தாயின் அர்ப்பணிப்பு மீண்டும் அந்தப் பாரம்பரியத்தை உயிர்ப்பித்துள்ளது. இது சமூகத்தில் வக்பு நன்கொடைகளின் அவசியத்தையும், அதன் மூலம் மதப்பணிகள் தொடர்ந்து நிலைத்திருப்பதையும் எடுத்துக்காட்டும் உன்னத முன்னுதாரணமாகும். இந்தத் தியாகம் பள்ளிவாசலின் சேவையை மேலும் வலுப்படுத்துவதோடு, எண்ணற்ற மாணவர்களின் இஸ்லாமிய அறிவுக்கு அடித்தளமிடும் என்பதில் சந்தேகமில்லை.
ராபீக்கா உம்மாவின் இந்த உன்னத செயலை வல்ல அல்லாஹ் கபூல் செய்து, அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் உயர்வான கூலிகளை வழங்குவானாக!
முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை இந்நற்காரியத்திற்காக ரபீக்கா உம்மா எனும் தாய்க்கும், அவரது குடும்பத்தினருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
