கல்முனை ஆதார வைத்தியசாலையினால் பாரிசவாத விழிப்புணர்வு நடைபவனி

-கல்முனை நிருபர்-

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் ஏற்பாட்டில் பாரிசவாத நோயைக் குணப்படுத்தக்கூடிய வகையில் “விரைந்து வாருங்கள் விரைந்து குணமாக்குங்கள்”  எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடை பவனி வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

வைத்தியசாலை முன்றலில் ஒன்று கூடிய வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் ஆகியோர் விழிப்புணர்வு நடைபவனியை ஆரம்பித்தனர். குறித்த நடைபவனி கல்முனை நகர் ஊடாகச் சென்று வைத்தியசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நிறைவடைந்தது.

இவ் நடைபவனியில் கலந்து கொண்டவர்கள் பாரிசவாத நோயை குணப்படுத்தக்கூடி சிகிச்சை முறை தற்போது உள்ளது. சடுதியாக உங்களது பேச்சில் மாறுபாடோ, கை அல்லது கால்கள் இயங்க மறுத்தாலோ அல்லது விறைப்புத்தன்மை ஏற்பட்டாலோ அவை பாரிசவாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் தென்படின் தாமதிக்காமல் நோயாளி உடனடியாக கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவேண்டும் , அதிகபட்சம் 4 மணித்தியாலத்திற்குள் அனுமதிக்கப்பட்டால் மாத்திரமே இதற்கான விசேட சிகிச்சை வழங்க முடியும்.

இதற்கு உடனடி சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதன் மூலம் நிரந்தரமான உடல் செயலிழப்பை, உயிராபத்தையோ தவிர்த்துக் கொள்ள முடியும் என்ற கோஸங்களையும், துண்டுப்பிரசுத்தையும பொதுமக்களுக்கு விநியோகித்திருந்தனர்.

இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர்களான வைத்தியர் மதன், வைத்தியர் இராஜேந்திரன், மருத்துவ நிபுணர் இதயகுமார், விபத்து மற்றும் இவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு வைத்தியர் சுரேஸ் ஆகியோர் உரையாற்றினார்கள். இங்கு மருத்துவ நிபுணர் வைத்தியர் இதயகுமாரின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.