கலப்பையில் சிக்கி சிறுவன் மரணம்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சுழல் கலப்பையில் சிக்கி சிறுவன் உயிர் இழந்துள்ளார்.

கண்ணகி கிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் (வயது 16) என்ற சிறுவனே இதன்போது உயிர் இழந்துள்ளார்.

குறித்த சிறுவன் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதாகவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் உழவு இயந்திர சாரதியாக வேண்டும் எனும் ஆசையில் நெருங்கிய நண்பரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி எடுத்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.