
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு நோய்
இலங்கையில் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய்க்கு (Gestational Diabetes) உள்ளாகும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும், நீரிழிவு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் தொடர்பான விசேட மருத்துவருமான மருத்துவர் மணில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கர்ப்பமடைவதற்கு முன்பே உடல் நிறை அதிகமாக இருத்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் இந்த நோய் ஏற்படுவதற்கு முக்கியான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், பிற்காலத்தில் பாரிய சுகாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்த அவர், இக்குழந்தைகள் வளரும்போது நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்களுக்கு உள்ளாகும் அபாயம் மிக அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும்,உடல் நிறை அதிகமுள்ள பெண்கள் கர்ப்பமடைவதற்கு முன்னரே தமது எடையைக் குறைக்க வேண்டும். அத்தோடு, ஆரோக்கியமான உணவு முறை மற்றும் முறையான உடற்பயிற்சி மூலம் எடையில் 7 முதல் 10 வீதம் வரை குறைப்பது நோய்த்தாக்கத்தைக் கணிசமாகக் குறைக்கும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
