கரையோர ரயில் நடவடிக்கை வழமைக்கு

கொழும்பு – கொம்பனித்தெரு தொடருந்து நிலையத்துக்கு அருகில் தடைப்பட்டிருந்த கரையோர மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் முதல் குறித்த தொடருந்து மார்க்கத்திலான சேவைகள் வழமைபோல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொம்பனித்தெரு தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மதிலை அகற்றுவது தொடர்பில் தொடருந்து நிலைய ஊழியர்களுக்கும் அந்த பகுதி மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இதனால் அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில், கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.