
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கவுள்ள விஜய்?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் குடும்பத்தினரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 இலட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் தவெக தலைவர் அறிவித்திருந்தார்.
மேலும், அவர்களது குடும்பத்தினரை காணொளி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கடந்த 17ஆம் திகதி விஜய் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண தொகை வழங்குவதாக கூறப்பட்டது.
ஆனால் அந்த சந்திப்பானது நடைபெறவில்லை.
இதனிடையே கடந்த 18ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 இலட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தவெக தலைவர் கரூருக்கு எப்போது சென்று மக்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்து, அவர்களை அழைப்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விரைவில் சென்னைக்கு சென்று தவெக தலைவரை சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் இந்த சந்திப்புக்கான திகதி விரைவில்அறிவிக்கப்படும் எனவும், போக்குவரத்து ஏற்பாடுகள் த.வெ.க. சார்பில் செய்து தரப்படும் எனவும் த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் குறித்த சந்திப்பு தொடர்பான உத்தயோகபூர்வ அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
