கம்பளையில் உயிரிழந்தோர் தொடர்பில் வெளியான தகவல்!

திட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை தொடர்ந்து, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளைப் பகுதியில் மட்டும் 1,000 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தவறானது என்று கண்டி மாவட்டச் செயலாளர் மறுத்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனை தெரிவித்ததுடன், இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், இராசமாணிக்கம் சாணக்கியம், திலித் ஜயவீர, சுஜீவ சேனசிங்க மற்றும் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அனர்த்தங்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள கண்டி மாவட்டத்தின் நிலைமைகள் குறித்த இந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு கண்டி மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.

இதன்போது உயிரிழப்புகள் குறித்த அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மாவட்டச் செயலாளர் இதனை நிராகரித்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

மீட்பு மற்றும் உடலங்களை மீட்கும் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால், இவ்வாறான அனர்த்தங்களின் போது உயிரிழப்பு எண்ணிக்கையில் முரண்பாடுகள் ஏற்படுவது பொதுவானது என்பதை மாவட்டச் செயலாளர் ஏற்றுக்கொண்டார்.

அதேநேரம், சேதமடைந்த வீதிகள் காரணமாகத் தொலைதூரக் கிராமங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக எழுப்பப்பட்ட கவலைகள் குறித்தும் அதிகாரிகள் பதிலளித்தனர்.

கூடிய விரைவில் போக்குவரத்து வசதிகளை மீள அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.