
கனடா நீச்சல் குளத்தில் விபரீத சம்பவம்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென வாந்தி மற்றும் உடல்நலப் பாதிப்புக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் கேன்மோர் (Canmore) பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளம் ஒன்றில் பெற்றோரின் மேற்பார்வையில் சிறுவர்கள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பல பிள்ளைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதுடன், சிலர் வாந்தி எடுக்கத் தொடங்கினர்.
பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர், சுமார் 30 சிறுவர்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அவ்விடத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக 11 சிறுவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேரின் நிலை சீராக உள்ள போதிலும், ஒரு சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர கால நிபுணர்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, அந்த நீச்சல் குளத்தின் காற்றோட்டப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட ரசாயனப் பொருள் (Chemical) அதிகளவில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், நீச்சல் குளத்தின் அருகே என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
