கனடா செல்ல பணம் கொடுத்து ஏமாந்த விரக்தியில் உயிரை மாய்த்த நபர்!
-யாழ் நிருபர்-
வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவுஇ 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த செல்வராசா லிபாஸ்கரன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த நபர் கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 80 இலட்சம் ரூபா பணத்தினை கொழும்பில் உள்ள முகவரிடம் கொடுத்துள்ளார்.
இருப்பினும் அவர் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில், தனது பணத்தினை மீள வழங்குமாறு தொடர்ச்சியாக முகவரிடம் கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணத்தை கேட்டவேளை அந்த பணம் ஒன்லைனில் களவாடப்பட்டதாக முகவர் கூறியுள்ளார், இதனால் விரக்தியில் கடந்த திங்கட்கிழமை இரவு அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வாந்தி எடுத்துவிட்டு மனைவியிடம் நடந்தவற்றை கூறினார்.
அவர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 1 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.