கனடாவில் குடிவரவு முறைமையில் மாற்றம் : யாருக்கெல்லாம் முன்னுரிமை?

கனடாவின் ‘எக்ஸ்பிரஸ் என்ட்ரி’ (Express Entry) குடிவரவு முறைமையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களின்படி, நிரந்தர வதிவிட அனுமதி வழங்கும்போது ஆராய்ச்சியாளர்கள், சிரேஷ்ட முகாமையாளர்கள், போக்குவரத்துத் துறையினர் மற்றும் இராணுவப் பணியாளர்களுக்கு இனி முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

குறிப்பாகக் கட்டுமானம்,சுகாதாரம், கல்வி மற்றும் நிதித்துறை சார்ந்த சிரேஷ்ட மேலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள்,வானூர்தி ஓட்டிகள் (Pilots) மற்றும் வாகன திருத்துநர்கள் ஆகியோர் இந்த முன்னுரிமைப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டு இராணுவத்தில் 10 ஆண்டு அனுபவம் பெற்று, கனடியப் படையில் பணிபுரிய வாய்ப்புப் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகளிலும் சில கடுமையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறைந்தபட்ச பணி அனுபவத் தேவை 6 மாதங்களிலிருந்து ஒரு ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அனுபவம் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் பெற்றதாக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயம் மற்றும் உணவு சார்ந்த (Agriculture and Agri-food) தொழில் பிரிவுகள் இந்தப் முன்னுரிமைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

கனடாவில் ஒரு வருடத்திற்கு மேல் தங்கியிருப்பவர்கள் புகலிடம் (Asylum) கோருவதைத் தவிர்த்து, தகுதியுள்ளவர்கள் முறையான வேலைவாய்ப்பு வழிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என குடிவரவு அமைச்சர் லேனா மெட்லெட்ஜ் டயப் வலியுறுத்தியுள்ளார்.