கண்டி மாவட்டச் செயலகத்திற்கு குண்டு மிரட்டல்! – 5 இடங்களில் வெடிகுண்டுகள் என மர்ம மின்னஞ்சல்!

கண்டி மாவட்டச் செயலக வளாகத்தில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட தேடுதல் நடவடிக்கைகளில் இதுவரை வெடிபொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டி மாவட்டச் செயலாளரின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு இன்று வெள்ளிக்கிழமை  வெள்ளிக்கிழமை மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், மாவட்டச் செயலகத்தின் 5 வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

கண்டி காவல்துறை நிலைய அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனைகளை ஆரம்பித்தனர்.

இதன்படி தேடுதல் பணிகளைத் துரிதப்படுத்த காவல்துறை மோப்ப நாய் பிரிவு,காவல்துறை விசேட அதிரடிப்படையின் (STF) குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு
களமிறக்கப்பட்டன.

தற்போது வரை சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்றாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகத் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, இந்த மிரட்டல் மின்னஞ்சலின் உண்மைத்தன்மை மற்றும் அதனை அனுப்பியவர் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.