கண்டி தேசிய வைத்தியசாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கக் நான்கு மாடிகளைக் கட்டிடம் அமைக்கத் திட்டம் – பணிப்பாளர் இரேசா பெர்னான்டோ

கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்கள் நிறுத்தி வைக்கக் கூடியதான நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் இரேசா பெர்னான்டோ தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த இரேசா பெர்னான்டோ,

தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் பல்வேறு துறைகளிலும் பணியாளர்களாக சுமார் 6,800 பேர் கடமையாற்றுகின்றனர். அத்துடன், நோயாளர்களுக்காக வரும் வாகனங்களும் சேர்ந்து பாரிய வாகன நெரிசலை ஏற்படுத்துகின்றன.

பணியாளர்களது வாகனங்களைக் கூட நிறுத்தி வைப்பது பாரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே இது விடயமாக சுகாதார அமைச்சு மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கண்டி வைத்தியசாலைக்குரிய காணிகளை நீண்டகாலமாக சட்ட விரோதமாக சில தனி நபர்கள் கையகப்படுத்திக் கொண்டிருப்பதால் வைத்திய சாலை நிர்வாகத்திற்கு அதுவும் ஒரு பாரிய சவாலாக இருக்கிறது. வைத்திய சாலையின் பிரதான வாயிலில் ஏற்பட்டு வரும் நெரிசல் காரணமாக உள்வரும் அவசர நோயாளர்கள் கூட சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

நோயாளர் காவு வண்டிகள் கூட உள்வருவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. எனவே முதற்கட்டமாக நான்கு மாடிக்கட்டித்தில் இரண்டு மாடிகளையாவது துரித கதியில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.