கண்டியில் வேகமாக பரவும் டெங்கு
கண்டி மாவட்டத்தில் டெங்கு வேகமாகிப் பரவி வருவதாகவும், மிகத் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களில் ஒன்றாக பெயரிடக் கூடிய நிலையை அண்மித்துள்ளதாக சமூக சுகாதார வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் சுரங்க பிரனாந்து தெரிவித்தார்.
கண்டி செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட ஒறுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பிரதேசத்தில் வாரத்திற்கு 100இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயாளர்கள் என இனம் காணப்பட்டால் அப்பிரதேசம் தீவிரமாக டெங்கு பரவும் பிரதேசமாக சுகாதார வைத்திய அதிகாரியால் அடையாளப்படுத்தப்படும்.
அந்த அடிப்படையில் தற்போது கண்டியும் அத்தகைய இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மே மாதம் இதுவரை கண்டி மாவட்டத்தில் 340 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இது மேற்படி இலக்கை அண்மித்த தொகையாகும்.
யட்டிநுவர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் கண்டி பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவு என்பவற்றிலே அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
அதே நேரம் கடந்த வாரத்தில் மட்டும் கண்டி மாவட்டத்தில் 116 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். எனவே எந்த அடிப்படையில் பார்த்தாலும் கண்டி தீவிர டெங்கு அபாய வலயமாக மாறிவருகிறது என்றார்.
மாவட்ட ஒழுங்கிணைப்புக்குழுத் தலைவர் காணி விவசாய கமநல சேகேள் அமைச்சர் லால்காந்த தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.