
கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தில் இழுபறி: அரசாங்கம் மீது நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவே கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் அரசாங்கம் திட்டமிட்டு காலதாமதம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 8 மாதங்களாக கணக்காய்வாளர் நாயகம் பதவி காலியாக உள்ளமை அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவரை இப்பதிவிக்கு நியமிக்க எடுக்கப்பட்ட முயற்சி அரசியலமைப்பு சபையினால் முறியடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே சில அமைச்சர்கள் அரசியலமைப்பு சபையை விமர்சிக்கத் தொடங்கியுள்ளதாக நாமல் சுட்டிக்காட்டினார்.
இறக்குமதி டெண்டர் முறைகேடுகள், துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக அகற்றப்பட்டமை மற்றும் தரமற்ற மருந்து விவகாரங்கள் போன்ற ஊழல்களை மறைக்க, தமக்கு வேண்டிய ஒருவரை இப்பதிவியில் அமர்த்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் முயல்வதாக அவர் சாடினார்.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் கடன்கள் மற்றும் உதவிகள் முறையான கணக்காய்வு அறிக்கைகளைச் சார்ந்தே உள்ளன.
கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நிலையில், இந்த நிதியுதவிகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
