அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நியூ ஜெர்சியில் கட்டுமானப் பணிகளின்போது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கான காப்பு ஃபைபர்-ஆப்டிக் கேபிள் தவறுதலாக துண்டிக்கப்பட்டதே இதற்குக் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்சில்வேனியாவில் உள்ள அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) கட்டுப்பாட்டு நிலையத்தில் பிரதான தொடர்பு இணைப்பும் செயலிழந்திருந்த நிலையில், காப்பு இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு ரேடார் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நியூயோர்க், நியூவர்க், பிலடெல்பியா மற்றும் போஸ்டன் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் உள்வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்தச் சம்பவத்தால் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமடைந்ததுடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. கேபிள் மற்றும் தொடர்பு இணைப்புகள் பின்னர் சீரமைக்கப்பட்டு விமானச் சேவைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பினாலும், ஏற்பட்ட விமானப் போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய மேலும் காலம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










