கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதங்களோடு பிரித்தானிய பிரஜை கைது

பிரித்தானிய பிரஜை ஒருவர் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பார்க்கர் ரொபர்ட் மைக்கேல் (54 வயது) என்ற பிரித்தானிய பிரஜையே கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரிடமிருந்து ரிவால்வர் துப்பாக்கி, ‘ராம்போ’ கத்தி, 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனுக்கு செல்ல விமானத்தில் ஏறும் முன் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பிடிபட்ட சந்தேக நபர், குறித்த ரிவால்வர் துப்பாக்கி ஒரு கலைப்பொருள் என்றும் அதை தனக்கு தனது பாட்டி பரிசாக வழங்கினார் என்றும் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.