
கட்டார் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறது இலங்கை
கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு (Qatar Charity) விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்து ஒரு பதிவை இட்டுள்ளார்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கட்டாருக்கு சென்றுள்ள, அமைச்சர் காஞ்சன விஜயசேகர கத்தார் தொண்டு நிறுவன அதிகாரிகளை நேற்று புதன்கிழமை சந்தித்தார்.
“2019 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட குறித்த தடையை நீக்குவதற்கான முடிவை பாதுகாப்பு அமைச்சு சட்டமா அதிபருக்கு தெரிவித்துள்ளதான செய்தியை தெரிவித்தேன். இலங்கையிலும் உலகளவிலும் தொண்டு நிறுவனத்தின் பணிகள் குறித்து விவாதித்தேன்” என்று அவர் டுவிட் செய்துள்ளார். .
முன்னதாக, வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான வழக்கின் போது, ‘கட்டார் தொண்டு’ நிறுவனம் ஒரு பயங்கரவாத நிதி அமைப்பு என்றும், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தொடர்பான குற்றங்கள் தங்களால் விசாரிக்கப்படுவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
