
கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பத்திரிக்கை துறை
வெளி மாகாணங்களில் பத்திரிகை விற்பனை குறைந்துள்ளதாக பத்திரிகை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பத்திரிகைகளின் விற்பனை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
டொலர் நெருக்கடி மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாளிதழ் அச்சடிக்கும் காகித இறக்குமதிக்கான கடன் கடிதங்களை திறப்பது சிக்கலாக மாறியுள்ளது.
மேலும் சில நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட காகிதத்தை பயன்படுத்தி செய்தித்தாள்களை அச்சிடுகின்றன.
மேலும் ஐந்து மாதங்களுக்கு பத்திரிகை அச்சிடுவதற்கு தேவையான காகிதங்கள் நிறுவனத்திடம் உள்ளதாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருமான அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.
ஆனால், சில நிறுவனங்கள் இப்போது பத்திரிகை அச்சடிக்கும் காகிதம் இல்லாமல் கறுப்புச் சந்தை மூலம் காகிதத்தை வாங்க முயல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நிலையைக் கருத்தில் கொண்டு அதிக விலை கொடுத்து காகிதங்களை வாங்குவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே, நாளிதழ் அச்சிடுவதற்கான செலவு அதிகமாக உள்ளதாகவும், எரிபொருள் விலையேற்றம் காரணமாக போக்குவரத்துச் செலவும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, இதற்கு முன்னர் பல பத்திரிகை பதிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும், அதே பதிப்பை கொழும்பு மற்றும் மாகாணங்களுக்கு விநியோகிக்க பத்திரிகை நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
ரூ.30 ஆக இருந்த தினசரி நாளிதழின் விலை கடந்த ஜூன் மாதம் 50 ரூபா வரை உயர்த்தப்பட்டது.
ஞாயிறு நாளிதழ் ஒன்றின் விலை 150 ரூபாவாக உயர்த்தப்பட்டது.
நாளிதழ்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள போதிலும், மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால், மக்களின் தேவைகளில் பத்திரிகைகளை வாங்குவதும், வாசிப்பதும் முன்னுரிமை பெறுவதில்லை என பத்திரிகை நிறுவனங்கள் சுட்டிக் காட்டுகின்றன. .
இந்நிலைமையால் ஒட்டுமொத்த பத்திரிக்கைத் துறையும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
