கடும் காற்றுடன் பலத்த மழை – மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடும் என்பதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை இருக்கும் என திணைக்களம் கூறியுள்ளது.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.