கடலில் நீராட சென்ற இளைஞர்கள் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேர் நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடி கொண்டிருந்த போது கடல் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் உதவியோடு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்களான உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரன்ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித்குமார் (வயது 18) மற்றும் கொழும்பு பகுதியை சேர்ந்த யூசுப் (வயது 27) ஆகிய நால்வரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவர்களுள் ஸ்ரீகாந்த் சரன்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரனைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.