கடற் தொழிலாளர்களின் ஏழு மைல் பிரச்சினையால் கடற்படையினரால் கைதாகும் நிலை நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் எம்.பி
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன்பிடித்தொழிலினை மேற்கொள்ளும் மீனவர்கள் 7 மைல் கட்டுப்பாடு காரணமாக தொழிலினை மேற்கொள்ளும் பொழுது பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இம் மாவட்டம் ஓர் குடா ஆகும், இந்த 7 மைல் கட்டுப்பாடு குடா கடற்பரப்பிற்கு பொருத்தமில்லை. இது சம்பந்தமாக மீன்பிடி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்ற பொழுது இக்கட்டுப்பாட்டு விடயத்தில் திருத்தம் செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
எனவே, திருத்தம் மேற்கொள்ளும் வரை மீனவர்கள் தமது தொழிலினை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு ஏதுவாக கடற்படையினர் அவர்களை கைது செய்வது, அவர்களின் படகுகள், வலைகள் என்பவற்றினை பறிமுதல் செய்வது போன்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற போது தனது பிரேரனையின் போது இதனை முன்வைத்தார் தொடர்ந்தும் குறித்த பிரேரனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதற்கு இச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்
கிண்ணியா நகர சபையின் நிலப்பரப்பு சிறியதாக உள்ளதனாலும், நகர சபை எல்லைக்குள் அரச காணிகள் மிகக்குறைவாக காணப்படுவதினாலும், கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குள் வரும் உப்பாறு கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதியை கிண்ணியா நகர சபை எல்லைக்குள் உள்வாங்குவதற்கு கடந்த காலத்தில் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு சில முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது முழுமையடையவில்லை.
எனவே, உப்பாறு கிராம சேவகர் பிரிவிற்குள் வரும் கண்டற்காடு தளவாய் ஆற்றிலிருந்து மட்டக்களப்பு பிரதான வீதி வரையான பகுதியை கிண்ணியா நகர சபையுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவின் வெள்ளைமணல் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள Marble Beach நுழைவாயிலுக்கும் சின்னம்பிள்ளைச்சேனை குளத்திற்கும் இடைப்பட்ட இடத்திலுள்ள 5 பேருக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியினை விமானப்படையினர் சுவீகரித்து வைத்துள்ளனர்.
இக்காணி விமானப்படையினரின் பயன்பாட்டிலும் இல்லை, காணி உரிமையாளர்களை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கின்றார்கள் இல்லை.
எனவே, இக்காணியை விடுவித்து காணி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க கோருகின்றேன்.
கன்னியா பிரதேசத்தில் நீண்டகாலமாக குடியிருந்த முஸ்லிம் மக்கள் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறிய பொழுது எழுந்த சில பிரச்சினைகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதன்படி மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்பவற்றால் இது பள்ளிவாயலுக்குச் சொந்தமான காணி என தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து சுமார் 50 குடும்பங்கள் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
இதில் பலர் மின்சாரம், குடிநீர் இணைப்புக்களையும் பெற்றுள்ளனர். மின்சாரம், குடிநீரினைப் பெறாதவர்கள் புதிதாக இவற்றுக்கு விண்ணப்பிக்க முயலும் போது அவற்றை உறுதிப்படுத்தி வழங்க வேண்டாம் என பிரதேச செயலாளர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி கிராம சேவகர் உறுதிப்படுத்த மறுத்து வருகின்றார். இதன் காரணமாக பல குடும்பங்கள் மின்சாரம், குடிநீரிணைப் பெறமுடியாது அல்லல்படுகின்றனர்.
மூன்று வகையான நீதிமன்றங்களும் தீர்ப்பளித்த பின்னரும் அங்கு குடியிருப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புக்களைப் பெறுவதற்கு உறுதிப்படுத்திக் கொடுப்பதற்கு கிராம சேவகர் மறுப்பதானது நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயற்பாடாகும்.
எனவே, மின்சாரம், குடிநீர் இணைப்புக்களைப் பெறுவதற்குள்ள தடைகளை நீக்கி அங்குள்ள மக்கள் மின்சாரம், குடிநீர் இணைப்புக்களை பெறுவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் மேலும் தெரிவித்தார்.