கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட பொதியொன்று வெடித்ததில் இருவர் காயம்!

மன்னார் – சௌத்பார் கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட பொதியொன்று வெடித்ததில் இருவர் காயமடைந்து மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் இருவரும் கடலில் மிதந்து வந்த பொதியொன்றை சோதனைக்குட்படுத்திய போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் – பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மீனவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்ததாகக் கூறப்படும் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலில் மிதந்து வந்த பொதியைத் தாம் சோதனைக்குட்படுத்திய நிலையில், குறித்த பொதி வெடித்ததாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனினும், குறித்த மீனவர்கள் இருவரும் டைனமைட் வெடி பொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.