கடந்த 9 மாதங்களில் 104,602 சந்தேக நபர்கள் கைது : 955 கிலோ ஹெராயினை பறிமுதல்
நாடு முழுவதும் 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக அளவிலான போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, பொலிசார் அறிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவிக்கையில், மீட்கப்பட்ட போதைப்பொருட்களில் 955 கிலோகிராம் ஹெராயின், 1,422 கிலோகிராம் ஐஸ், 471 கிலோகிராம் ஹாஷிஷ், 29 கிலோகிராம் கோகோயின், 13,773 கிலோகிராம் கஞ்சா மற்றும் 3.5 மில்லியன் போதை மாத்திரைகள் அடங்கும்.
இதே நடவடிக்கைகளில், 61 ரீ-56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் 62 கைத்துப்பாக்கிகள் உட்பட 1,721 துப்பாக்கிகளையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். ஜனவரி முதல், துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய 328 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 38 துப்பாக்கிதாரிகள், 27 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 263 தொடர்புடையவர்களும் உள்ளனர்.
இதற்கிடையில், கடந்த ஜனவரி 12 முதல், பொலிசார் தினசரி சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், இதன் போது 5,101,516 நபர்கள் சோதனை செய்யப்பட்டு 104,602 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 4,630 பேர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நேரடியாக அடையாளம் காணப்பட்டனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 46,909 பேர் கைது செய்யப்பட்டதாகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 3,404 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.