கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு
இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் பொலிஸாரும் முப்படையினரும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளில் 922 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, 2025.01.01 முதல் 2025.07.11 வரையிலான காலப்பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 1,386 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 10,895 கிலோகிராம் கஞ்சா, 22 கிலோகிராம் கொக்கெய்ன் மற்றும் 329 கிலோகிராம் ஹேஷ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதோடு, இவைகளுடன் தொடர்புடைய 106,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 13.04.2025 முதல் 12.07.2025 வரை மேற்கொள்ளப்பட்ட விசேட குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் 35,442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறித்த காலப்பகுதியில் மாத்திரம் 302 கிலோகிராம் ஹெரோயின், 104 கிலோகிராம் ஐஸ் மற்றும் 2,641 கிலோகிராம் கஞ்சா ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.