கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி : முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையினால் முச்சக்கர வண்டி சாரதிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படாமையால் பழைய விலையை பாவனையாளர்களிடம் அறவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமது வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது ​​ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 91.35 அமெரிக்க டொலர்களாகவும், டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 85.11 அமெரிக்க டொலர்கள் ஆகவும் பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்த போதிலும், அது இன்னும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதற்கு முன்பு ஆகஸ்ட் 1ஆம் திகதி கடைசியாக எரிபொருள் விலை திருத்தப்பட்டது. அங்கு ஒரு லீற்றர் டீசலின் விலையை 10 ரூபாவால் மட்டுமே குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

உலக சந்தையின் எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது இந்த விலையில் திருத்தம் செய்யப்படவில்லை எனவும் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனவும் பல சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் பல நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை மின்வலு அமைச்சில் இடம்பெற்றது.