கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விசேட வழிகாட்டல்கள்

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபனின் ஒருங்கிணைப்பின் கீழ், யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கச்சதீவு திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

2026.02.27 ஆம் திகதி காலை 4.00 மணி தொடக்கம் பி.ப 01.00 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும்.

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27.02.2026 ஆம் திகதி காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் 1200 ரூபா ஆகும்.

கச்சதீவிற்கு குழுவாக / தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2026.02.27 ஆம் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026 ஆம் திகதி அன்று காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவினை கொண்டுவரமுடியும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.