கசினோ நுழைவுக் கட்டணம் உயர்வு! புத்தாண்டு முதல் சூதாட்ட வரிகளிலும் மாற்றம்!

இலங்கையிலுள்ள சூதாட்ட விடுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் மற்றும் பந்தயம் மற்றும் சூதாட்ட வரிகள் (Betting and Gaming Levies) அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் நாளை, 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

சூதாட்ட விடுதிக்குள் நுழையும் ஒரு நபருக்கான நுழைவுக் கட்டணம் 50 அமெரிக்க டொலர்களில் இருந்து 100 அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் இதனை அமெரிக்க டொலர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் செலுத்த வேண்டும்.

இலங்கைப் பிரஜைகள் இதற்கு நிகரான இலங்கை ரூபாய்களைச் செலுத்த முடியும்.

பந்தயம் மற்றும் சூதாட்ட வணிகங்கள் ஈட்டும் மொத்த வருமானத்தின் (Gross Collection) மீதான வரி 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு 10 இலட்சம் (Rs. 1 million) ரூபாய்க்கும் அதிகமான மொத்த வருமானம் ஈட்டும் வணிகங்களுக்கு இந்த வரி உயர்வு பொருந்தும்.

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தில், 2025 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) சட்டத்தின் ஊடாக இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அனைத்து சூதாட்ட விடுதி உரிமையாளர்களும் பந்தய வணிகத்தில் ஈடுபடுபவர்களும் ஜனவரி 1 முதல் இந்த புதிய வரி விதிப்புக்கு அமையச் செயல்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி நிர்வாகப் பிரிவிடம் பெற்றுக்கொள்ள முடியும்.