ஓய்வை அறிவித்தார் உருகுவே கால்பந்து ஜாம்பவான் லூயிஸ் சுவாரஸ்!

உருகுவே கால்பந்து ஜாம்பவான் லூயிஸ் சுவாரஸ், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது முடிவை அறிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஆறாம் திகதி பராகுவேக்கு எதிரான உருகுவேயின் FIFA உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்குப் பின்னர் தான் ஓய்வு பெறவுள்ளதாக சுவாரஸ்  தெரிவித்துள்ளார்.
17 ஆண்டுகளில் 142 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 69 கோல்களை அடித்துள்ளார்.
இதன் மூலம் உருகுவே அணி சார்பில் சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரராக தனது சர்வதேச பயணத்தை சுவாரஸ் முடிக்கவுள்ளார்.
2007ஆம் ஆண்டு கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் அவர் அறிமுகமாகியிருந்தார், இதனை தொடர்ந்து தனது அசாத்திய திறமையால் அணியின் முக்கிய வீரராக மாறினார்.
தனது ஓய்வு குறித்து பேசிய அவர்,
“ஓய்வு பெறுவதற்கான சரியான தருணம் எப்போது என்பதை அறிவதை விட சிறந்த பெருமை எதுவும் இல்லை, அதிர்ஷ்டவசமாக நான் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
ஏனென்றால் நான் சற்று ஒதுங்கி இருக்க விரும்புகிறேன் . எனக்கு 37 வயதாகிறது. அடுத்த உலகக் கிண்ண தொடரில் விளையாடுவது மிகவும் கடினம் என்பது தெரியும்.
நான் ஓய்வு பெறுவது எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது” என்று லூயிஸ் சுவாரஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுவாரஸ் தற்போது மேஜர் லீக் சாக்கரில் (எம்எல்எஸ்) இன்டர் மியாமி கழகத்தில் இல் தனது நீண்டகால நண்பரான லியோனல் மெஸ்ஸியுடன் விளையாடி வருகிறார்.
இந்நிலையில்,, தனது ஓய்வின் பின்னர் கழக விளையாட்டு வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்த சுவாரஸ் முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்