ஒரே நாளில் 12,731 சுற்றுலாப் பயணிகள் வருகை
கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி, இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.
பெப்ரவரி 1 முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 18,819 இந்திய சுற்றுலாப் பயணிகள் கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் 15 சதவீதம் இந்தியர்களாவர். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பெப்ரவரி முதல் 12 நாட்களில் மொத்தம் 124,460 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரே நாளில் அதிகபட்சமாக 12,731 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
போட்டி காரணமாக விமானக் கட்டணங்கள் வழக்கத்திற்கு மாறாக உயர்ந்துள்ளன.
வழக்கமாக 200 – 250 டொலர்களாக இருக்கும் சென்னை – கொழும்பு ஒரு வழி விமானக் கட்டணம், தற்போது 623 முதல் 756 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
டெல்லியில் இருந்து வரும் விமானங்களின் கட்டணம் 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து, ஒரு வழி டிக்கெட் 666 டொலர் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சொகுசு விருந்தகங்கள் கடந்த சனிக்கிழமை இரவு 100 சதவீத நிரம்பியுள்ளன.
வழக்கமாக 150 டொலர்களாக இருந்த பிரீமியம் அறைகளின் கட்டணம், கேள்வி அதிகரிப்பு காரணமாக 1,000 டொலர் வரை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
35,000 ரசிகர்கள் அமரக்கூடிய மைதானத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் ஐசிசி இணையதளம் மூலம் விற்றுத் தீர்க்கப்பட்டன.
இப்போட்டிக்காக சுமார் 88,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தமை ரசிகர்களிடையே இருந்த பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது.
