
ஒரு “வெளியேறும் வழியை” ட்ரம்ப் கண்டறிய வேண்டும் – திருத்தந்தை லியோ
அமெரிக்காவைச் சேர்ந்த கத்தோலிக்கத் திருச்சபையின் உலகளாவிய தலைவரான திருத்தந்தை லியோ (Pope Leo), பதவியேற்ற முதல் 10 மாதங்கள் மௌனம் காத்த நிலையில், தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராகத் தனது இராஜதந்திரக் குரலைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் அதனால் உருவான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு “வெளியேறும் வழியை” (Off-ramp) கண்டறிய வேண்டும் என்று திருத்தந்தை நேரடியாக வலியுறுத்தியுள்ளார்.
போரைத் தொடங்கும் தலைவர்களின் பிரார்த்தனைகளைக் கடவுள் நிராகரிக்கிறார் என்றும், அவர்களின் கைகள் “இரத்தத்தால் படிந்துள்ளன” என்றும் திருத்தந்தை லியோ கடுமையாகச் சாடியுள்ளார்.
இது அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
இதற்குப் பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை ஊடகப்பேச்சாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt), இராணுவ வீரர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொள்வதில் தவறில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, டிசம்பர் மாதம் நியூயோர்க் பேராயர் கர்தினால் திமோதி டோலனை பதவியிலிருந்து நீக்கி, மிதவாதப் போக்கைக் கொண்ட ரொனால்ட் ஹிக்ஸை நியமித்ததன் மூலம் அமெரிக்க கத்தோலிக்கத் தலைமைத்துவத்தில் திருத்தந்தை ஒரு முக்கிய மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளார் என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
