
ஒரு மில்லியன் மாணவிகளுக்கு இலவச அணையாடைகள்!
இலங்கையிலுள்ள தரம் 06க்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை (Sanitary pads) வழங்கும் தேசியத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
டிசம்பர் 22 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற மாணவிகளின் சுகாதார நலன் குறித்த கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2024 இல் கிராமப்புற, தோட்டப்பகுதி மற்றும் பின்தங்கிய பாடசாலைகளை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 1.44 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
தகுதியுள்ள ஒவ்வொரு மாணவிக்கும் அணையாடைகளைக் கொள்வனவு செய்வதற்காக ஆண்டொன்றுக்கு 1,440 ரூபா பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும்.
இவை மாகாண கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும். மாணவிகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படும்.
கலந்துரையாடலின் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார், மாணவிகள் தங்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
புவியியல் ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் கருத்திற்கொண்டு வவுச்சர் விநியோக பொறிமுறையைச் சீரமைக்க வேண்டும்.
பாடசாலைகளில் பயன்படுத்தப்பட்ட அணையாடைகளை சுற்றாடலுக்குப் பாதிப்பின்றி அகற்றும் முறைகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
