
“ஒரு பிழையை வைத்து அனைவரையும் குற்றம் சாட்டுவது எங்களுக்கு மன அழுத்தத்தை தருகிறது” – மன்னார் வைத்தியசாலை நிர்வாகம்!
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்த சிந்துஜா என்பவரின் மரணம் குறித்து ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம், அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்கவில்லை, என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு ஊடாக ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை ஊடக அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
28.07.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த திருமதி ஆ.சிந்துஜா என்ற இளம் தாயின் மரணம் வைத்தியர்களாகிய எங்களையும் வேதனைப்படுத்தியது மட்டுமன்றி, உங்களைப் போன்று அதே அளவு மன அமைதியின்மையையும் ஏற்படுத்தியது உண்மை.
ஆயினும், ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு, நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம், அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்கவில்லை .
தற்சமயம் பல்வேறு காரணங்களால் மக்களுக்கும் வைத்திய சேவைக்கு இடைப்பட்ட இடைவெளி வெகுவாக அதிகரித்துள்ளது, இது ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை அல்ல, ஆகவே வைத்தியசாலையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளையோ, முன்னேற்றங்கள் தொடர்பான கருத்துக்களையோ எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறியத்தருவது மக்களான உங்களின் தார்மீகக் கடமையாகும் என்பதையும் இவ்வறிக்கை மூலம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இது உங்கள் வைத்தியசாலை. நாங்கள் உங்கள் சேவையாளர்கள். இங்கு இடம்பெற்ற பிழை ஒன்றை வைத்து அனைவரையும் பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டுவது என்பது ஒட்டுமொத்த வைத்தியசாலையையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி கவலையடையச் செய்கிறது.
எனினும் நாம், உங்களுடன் சேர்ந்து பயணிப்போம், இந்த விடயத்தில் மட்டுமன்றி எதிர்வரும் சந்தர்ப்பங்களிலும் உங்களுடன் இணைந்து வைத்தியசாலையை முன்னேற்றுவதை எமது மனப்பூர்வமான கடமையாக கருதுகின்றோம்.
இந்த அறிக்கையானது, பொதுமக்களுக்கு தெளிவினை ஏற்படுத்தி, மக்களுக்கும் வைத்தியசாலைக்கும் இடையிலான நம்பிக்கையை மீளக் கட்டி எழுப்பும் செயற்பாடுகளில் ஒன்றாகவே வெளியிடப்படுகிறது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
