
ஒரு கிலோ எலுமிச்சையின் விலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாவாக அதிகரிப்பு!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலுமிச்சை விளைச்சல் குறைந்துள்ளதால், தம்புத்தேகம பொருளாதார மையத்தில் ஒருகிலோ எலுமிச்சையின் மொத்த விலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாவாக அதிகரித்துள்ளது.
பொருளாதார மையத்திற்கு மிகவும் குறைவாகக் கிடைக்கும் எலுமிச்சை விளைச்சல் குறுகிய காலத்திற்குள் இத்தகைய அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதன் வர்த்தக சங்கத்தின் தலைவர் சுனில் செனெவிரத்ன தெரிவித்தார்.
இந்த நிலைமை காரணமாக திறந்த சந்தையில் எலுமிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ எலுமிச்சையின் விலை இரண்டாயிரம் ரூபாவை நெருங்கியுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக பொருளாதார மையத்தின் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த காலத்தில் கடும் விலை வீழ்ச்சியைச் சந்தித்த ஒரு கிலோ பூசணிக்காயின் மொத்த விலையும் 60 ரூபாவாக அதிகரித்துள்ளது. தலைவரின் கூற்றுப்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
பழங்களின் விலைகளும் அதிகரிப்பைக் காட்டுவதாகவும், கோழிக்குட்டு வாழைப்பழம் மற்றும் புளிப்பு வாழைப்பழத்தின் விலைகள் முறையே 220 ரூபாய் மற்றும் 80 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், பப்பாளி மற்றும் தர்பூசணி விலைகள் இன்னும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக தம்புத்தேகம பொருளாதார மையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
