ஒன்லைன் காதல் மோசடி -வீட்டை விற்று பல கோடி இழந்த மூதாட்டி
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் நகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தன்னை ஹொலிவூட் நடிகர் ஜேசன் மோமோவா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரால், ஒன்லைன் காதல் மோசடியில் சிக்கி, தான் வசித்து வந்த வீட்டையும் விற்று சுமார் ரூ.6 கோடி பணத்தை இழந்துள்ளார்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு ஒன்லைன் மூலம் ஒருவர் அறிமுகமானார்.
அந்த நபர் தன்னை பிரபல அமெரிக்க ஹொலிவூட் நடிகர் ஜேசன் மோமோவா என்று கூறிப் பழகியுள்ளார்.
மேலும், தனக்கு ஒரு வாழ்க்கை துணை தேவைப்படுவதாகவும், ஹவாய் தீவில் ஒரு வீடு கட்டி நாம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்றும் அந்த மூதாட்டிக்கு ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அந்த நபர் கூறிய இந்த வார்த்தைகளை மூதாட்டி முற்றிலும் உண்மை என நம்பியுள்ளார்.
இந்த நிலையில், தன்னிடம் இருந்த பணம் எல்லாம் திரைப்பட தயாரிப்பு பணிகளில் முடங்கியிருப்பதாகவும், தனக்கு உடனடியாக பணம் தேவை என்றும் அந்த நபர் கேட்டுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பிய மூதாட்டி, அவர் கேட்கும்போதெல்லாம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
மோசடி வலையில் விழுந்ததை அறியாத மூதாட்டி, தான் வசித்து வந்த வீட்டை கூட விற்று, அந்த நபருக்கு சுமார் ரூ.6 கோடி (பிரிட்டிஷ் பவுண்டுகளின் மதிப்பில்) பணத்தை அனுப்பி உள்ளார்.
கடைசியில், இது ஒரு திட்டமிட்ட மோசடி வலை என்பதை உணர்ந்த மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக கேம்பிரிட்ஜ்ஷயர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார்.
அந்த முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியை ஏமாற்றி பல கோடி பணத்தை மோசடி செய்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒன்லைன் வாயிலாக பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி நடக்கும் இத்தகைய காதல் மோசடிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
