ஒநாய் கடித்து 6 பேர் உயிரிழப்பு!

இந்தியா-உத்தரபிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்கள் தாக்கி ஆறு பேர் உயிரிழந்த நிலையில், மக்களை அச்சுறுத்தும் அந்த விலங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

2024 செப்டம்பரில் ஓநாய்க் கூட்டம் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சோகத்தைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் 9 முதல் தற்போது வரை, நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு முதிய தம்பதியினர் உட்பட ஆறு பேர் ஓநாய்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதையடுத்து, வனத்துறையினரும் உள்ளூர் நிர்வாகமும் ஓநாய்களைப் பிடிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஒக்டோபர் 11 அன்று, இளைஞர் ஒருவரைத் தாக்க முயன்ற ஓநாயை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினர்.

இதுவரை ஒரு ஓநாய் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. மற்றொரு ஓநாய் காலில் சுடப்பட்டு, இறந்திருக்கலாம் அல்லது நகர முடியாத நிலையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மூன்றாவது ஓநாயைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.வெள்ளம் மற்றும் மனித ஆக்கிரமிப்புகளால் வாழ்விடங்களை இழந்த ஓநாய்கள், உணவு தேடி மனித குடியிருப்புகளுக்குள் நுழைவதே இத்தகைய மனித-வனவிலங்கு மோதல்களுக்கு காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.