ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த தெணியானின் சிலை வடமராட்சியில் திறப்பு

-யாழ் நிருபர்-

மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியானின் (கந்தையா நடேசு) முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், உருவச்சிலை திறப்பு நிகழ்வும், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் – தெணியான்’ நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி – கொற்றாவத்தையில் அமைந்துள்ள அவர் வாழ்ந்த வீட்டில் நேற்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகரசபை ஆணையாளரும் கவிஞருமான இ.த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து ,தெணியான் அவர்களின் உருவச் சிலையினையும், கல்வெட்டினையும் மல்லாகம் நீதிமன்றின் பதில் நீதவானும், சட்டத்தரணியுமான சோ. தேவராஜா திறந்து வைத்தார். தொடர்ந்து தெணியானின் மனைவி மரகதம் சிலைக்கு மாலை அணிவித்தார்.

சோ. தேவராஜாவின் திறப்புரையினை தொடர்ந்து நூல் வெளியீட்டுரையையும் கருத்துரையினையும் எழுத்தாளர் மு. அநாதரட்சகன் நிகழ்த்தினார். தொடர்ந்து தெணியான் பற்றிய நினைவுப் பகிர்வினை கலாநிதி ந. ரவீந்திரன் நிகழ்த்தினார். தொடர்ந்து சிலையை வடிவமைத்த இளம் சிற்பியான கெங்காதரன் இந்துசன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தெணியானின் குடும்பத்தவர்களுடன் இணைந்து நிகழ்வை ஏற்பாடு செய்த ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரனின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வில் கிராமத்தவர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள், கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.