ஐ.நா. முழுமையான ஆதரவை வழங்கும்

சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஐ.நா. முழுமையான ஆதரவை வழங்குமென ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸிடம் உறுதியளித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்- ஹம்டியை சந்தித்தபோதே அவர் உறுதிவழங்கியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய சிரமங்களை அரசாங்கம் முன்னறிவித்துள்ளதாகவும், பாதிப்புக்களைக் குறைக்கும் முகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் உட்பட, நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கினார்.