ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 13 கோடி ரூபாய் ஊழல் : கன்னி உரையில் நிலாந்தன் (வீடியோ இணைப்பு)

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை பிரிவில் 13 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட வீதி அபிவிருத்தியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக, தமிழரசுக் கட்சியின் செங்கலடி தளவாய் வட்டார உறுப்பினர் செ.நிலாந்தன் வியாழக்கிழமை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இது குறித்து எதிர்வரும் சபை அமர்வில் பிரேரணை ஒன்றை முன்வைக்க உள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது குறித்து நிலாந்தன் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த போது.

ஏறாவூர் பற்று சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைந்து சபை செயலாளரின் அதிகாரத்தில் இருந்த கடந்த காலத்தில் 13 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட கிரவல் வீதிகளில் ஊழல் இடம்பெற்றுள்ளது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதனை எதிர்வரும் சபை அமர்வில் பிரேரணையாக கொண்டுவந்து விசாரணைகள் நடாத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைந்து சபை செயலாளரின் அதிகாரத்தின் கீழ் இருந்த போது, இலங்கையில் நடைபெற இருந்த தேர்தல் ஒன்றை அடிப்படையாக கொண்டு சபையில் சேமித்து வைக்கப்பட்ட 13 கோடி ரூபாய்க்கு வீதிகளுக்கு அவசர அவசரமாக கிரவல் போடப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள 15 சனசமூக நிலையங்களுக்கு வீதி புனரமைப்புக்கான ஒப்பந்த வழங்கப்பட்ட போதும் குறித்த ஒப்பந்தம் தனிநபர் ஒருவரின் ஊடக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி ஒப்பந்தம் ஊடாக போடப்பட்ட வீதிகள் பலவற்றில் எந்தவித கிரவல் மண்ணும் இல்லை என்பதோடு பல வீதிகளில் கிரவல் மண்ணுக்கு பதிலாக ஊத்த மண் போடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக போடப்பட்ட வீதிகள் பலவற்றை காணவில்லை என்றும், செலவு செய்யப்பட்ட பணத்தின் பெருமதிக்கு ஏற்ப வீதிகள் போடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சபையின் பணத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன் படுத்தியதோடு மட்டுமல்லாமல் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

இவ்வாறு 13 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வந்தாலும் சபையில் நடைபெற்ற மேற்படி ஊழல் குறித்து விசாரணைகளை முறையாக நடாத்தி உண்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் எதிர்வரும் சபை அமர்வில் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளேன் என தெரிவித்தார்.