ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய ஆண்

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை ஹோட்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஆண் ஒருவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய ஆணை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நோன்பு முடிப்பதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை சாப்பிடுவதற்காக குறித்த ஹோட்டலுக்கு சென்று மேசை ஒன்றில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கு சாப்பிடுவதற்காக சென்ற இளைஞனின் கால் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மேசைக்காலில் தட்டுப்பட்டதையடுத்து மேசையில் கப்பில் இருந்த தண்ணீர் சரிந்து வீழந்துள்ளது.

தெரியாமல் தட்டுப்பட்டுவிட்டது என பொலிசாரிடம் மன்னிப்பு கோரிய நிலையில் இருவருக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பொலிசாரை தாக்கிய இளைஞன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் அவரை பொலிசார் கைது செய்து அவருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்ததையடுத்து நீதவான் வைத்தியசாலைக்கு சென்று இளைஞனை பார்வையிட்ட பின்னர் அவரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க