எவ்வளவுதான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பொறுமையுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும் – சஜித் பிரேமதாச
சமூக ஊடகங்கள் வாயிலாக எவ்வளவுதான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாம் செல்லும் பாதை சரியானதாக இருந்தால், பொறுமையுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்றும், இறுதியில் உண்மையே வெல்லும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாராஹேன்பிட்டி அபயாராம விகாரையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை இன்று சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘உண்மை ஒருநாள் வெல்லும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
அன்று ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அவருக்கு ஆதரவாக நின்றார்.
அன்று முதல் நான் மகா சங்கத்தினருக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் வழங்கி வரும் கௌரவம் என்றும் மாறாது.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தின் ஊடாக மதத் தலைவர்களை மையப்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் தடுக்கப்பட வேண்டும்.
அதற்கு மேலாக, நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஏற்று, அனைத்து மதங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு ‘சர்வ மதப் பேரவையை’ உருவாக்க வேண்டும்.
இதன் ஊடாக இனவாதம் மற்றும் மதவாதப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், தற்போதைய அரசாங்கத்தின் கீழேயே பிக்குகள் அதிகளவில் அவமதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டதுடன், ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் பௌத்த மதத்திற்காக முன்னெடுக்கப்பட்ட பல பணிகளை நினைவு கூர்ந்து, இன்று அவை நிறுத்தப்பட்டுள்ளமை குறித்து தனது கவலையைத் தெரிவித்தார்.
