
எரிபொருள் வழங்க கட்டார் அரசு முன்வைத்துள்ள நிபந்தனை?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகினால் தான் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய உதவிகள் வழங்குவது தொடர்பான விடயங்களை முன்னெடுக்கலாம் என கட்டார் அரச தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் அமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோர் கட்டார் நாட்டிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போதே கட்டார் நாட்டு தலைவர் இவ்வாறான ஒரு நிபந்தனையை அமைச்சர் குழுவிடம் மறைமுகமாக முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த கொவிட்-19 தொற்றுக் காலங்களின் போது உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய, கொவிட் தொற்றால் உயிரிழந்த இஸ்லாமிய மக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு உலகின் 57 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை விடுத்தது.
எனினும், இலங்கை அரசு அதற்கு செவிசாய்க்காமல் ஜனாஸாக்களை தகனம் செய்தமை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன், கட்டார் தொண்டு நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்து, அந்த அமைப்பிடம் உதவி பெற்று கல்வி நிறுவனம் நடத்திய ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பன இவ்வாறான இராஜதந்திர எதிர்ப்பு வெளிப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
