எரிபொருளிற்காய் இரவிரவாக வீதியில் படுத்திருந்து ஏமாற்றமடைந்த இளைஞர்கள்

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இதேவேளை, கல்விப் பொதுத்தர சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டிற்கு செல்லும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டது.

நேற்று சனிக்கிழமை மாலை தொடக்கம் இன்று காலை 11.30 மணி வரை மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கிடைக்கும் என சுமார் 3 கிலோ மீற்றர் துராத்திற்கு அப்பால் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதன்போது இன்று பெற்றோல் வராது டீசல் மட்டும்தான் கிடைக்கும் என வாழைச்சேனை பொலிசாரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டதனை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டது.

சிலர் ஆவேசம் கொண்டு மாவட்டத்தின் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பின்னர் பொலிசார் மற்றும் எரிபொருள் நிலைய முகாமைத்துவத்தினால் எரிபொருள் வழங்குவதற்கான டோக்கன் எனப்படும் எரிபொருள் பகிர்வு அட்டை வழங்கப்பட்டு எரிபொருள் வந்ததும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டமையினையடுத்து சுமூகமானநிலை ஏற்பட்டது.

இதேபோன்று கிரான் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் வழங்கப்படவில்லை.

எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக வாகன சாரதிகள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளிளை பெற்றுக்கொள்ளாமல் வீடு திரும்பும் நிலை காணப்பட்டது.