
எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது அரசு ஊழியர்கள், பொலிஸ், இராணுவம் எங்களுக்கு ஆதரவு: ஏ.கே.டி தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடைசி நேரத்தில் தந்திரத்தை மேற்கொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதாகக் தெரிவித்துள்ள இதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பெரும்பான்மையான அரச ஊழியர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இம்முறை தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க எந்த தந்திரத்திலும் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ஏதாவது தந்திரத்தை கையாளுவார் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். அவரால் எந்த தந்திரமும் செய்ய முடியாது. பெரும்பான்மையான அரச ஊழியர்கள் எம்மை ஆதரிக்கின்றனர். பெரும்பான்மையான பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் எமக்கு ஆதரவளிக்கின்றனர். ஓய்வுபெற்ற பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் எங்களுடன் இருக்கிறார்கள் எனவே, என்பிபி ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.
மக்களைக் கவனிப்பதற்காக முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைக்கும் எனத் தெரிவித்த திஸாநாயக்க, இதுவரை ஆட்சியாளர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களைக் கவனிப்பதற்காகவே அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
