எமக்கு இது தோல்வி அல்ல அடுத்த வெற்றிக்கான பலமான அத்திவாரத்தை இடும் வாய்ப்பு: கோவிந்தன் கருணாகரம்

2020ஆம் ஆண்டு 3 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த ஜே.வி.பி அதாவது தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாக பெற்று ஆட்சி அமைத்த வரலாறு உருவாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் அவரது இல்லத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமக்கு இது தோல்வி அல்ல. அடுத்த வெற்றிக்கான பலமான அத்திவாரத்தை இடும் வாய்ப்பாக தான் நாங்கள் இதை பார்க்கின்றோம்.

வடக்கு கிழக்கிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்டது. திருகோணமலையில் மாத்திரம் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதற்காக இணைந்து போட்டியிட்டோம். இதன் போது வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கணிசமான அளவு ஆதரவை வழங்கியிருந்தார்கள் அவர்களுக்கு நன்றிகள்.

மேலும் எதிர்காலத்திலே தமிழ் மக்கள் இணைந்து செயற்படாவிட்டால் தமிழ் தேசியம் எவ்வாறு அமையும் என்பதை சிந்தித்து அனைவரும் செயற்பட வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் தேசியத்துடனும், தமிழ் மக்களுடனும், தமிழ் தேசிய கட்சிகளுடனும் நேரடியான மோதலிலே ஈடுபட்டார்கள். அவர்களுடைய ஆட்சி வேறு விதமாக இருந்தது.

ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் அதனுடைய ஜனாதிபதி அந்த கட்சி தமிழ்தேசியத்தையும் தமிழ் மக்களது பிரச்சினைகளையும் கறையான் அரிப்பது போன்று அரித்துகொண்டு செல்கின்றது.

எங்களுடைய மக்களது உரிமைகளை பாதுகாக்கவேண்டுமானால் நாங்கள் எதிர்காலத்தில் எங்களுக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புக்களை துறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்