எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்கப்படாது

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை:

போதைப் பொருள்,குற்றச்செயல்கள் என்பவற்றுடன் பிணைந்த கருப்புப் பொருளாதாரம் எமது நாட்டில் எந்த விதத்திலும் அபிவிருத்தி,அமைதி, சுபீட்சம் என்பவற்றை கொண்டுவராது.

இந்தப் பேரழிவிலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் பேரழிவு கிராமங்கள்,நகரங்கள், குடும்பக் கட்டமைப்பை எந்தளவு ஆக்கிரமித்துள்ளது என்பதை நாம் அறிவோம். குடும்பத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வளர்ந்த பிள்ளை இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி மோசமான நபராக மாறியிருப்பார்.

எதிர்பார்ப்புடன் வளர்த்த பிள்ளை சமூகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் செயற்பாட்டாளராக மாறியிருப்பார்.

இதனை எந்தப் பெற்றோரினால் தாங்க முடியும்? தாம் பாலூட்டி வளர்த்த பிள்ளைக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுவதை எந்த தாயும் எதிர்பார்க்க மாட்டார்.ஆனால் இலட்சக்கணக்கான பிள்ளைகள் இந்த பேரழிவில் சிக்கியுள்ளனர். இது அந்த முழுக் குடும்பத்தையும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த பேரழிவினால் கிராமங்கள் பீதியடைந்துள்ளன.

இதனால் பிள்ளைகளை தொழிலுக்கு அனுப்ப,பகுதி நேர வகுப்பிற்கு அனுப்ப, விளையாடுவதற்கு அனுப்ப,சுற்றுலா அனுப்புவதற்குக் கூட பெற்றோர் பயப்படுகின்றனர். அதனால் தான் இந்தப் பேரழிவை தோற்கடிக்க வேண்டும்.

போதைப் பொருளுக்கு அடிமையாகும் பிள்ளை அடுத்து மோசடிகளில் ஈடுபட ஆரம்பிக்கிறார். திருடராக மோசடிகாரராக அவர் மாறுகிறார். போதைப் பொருள் வலையமைப்பிற்கு இறையாகி பணத்திற்காக கொலை செய்ய ஆரம்பிக்கிறார். கைதான 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களாக உள்ளனர்.

இது எமது நாட்டின் எதிர்காலத்தை முழுமையாக விழுங்கியுள்ளது. போதைப் பொருள் ஊடாக பெருமளவு பணப்பரிமாற்றம் இடம்பெறுகிறது. எந்த வர்த்கத்தின் ஊடாகவும் பல நூறு வருடங்களில் ஈட்ட முடியாத பணத்தை ஒரு படகின் ஊடாக ஈட்டுகின்றனர்.

அரச பொறிமுறையை அச்சுறுத்தி தமது பணியை மேற்கொள்ளும் போக்கு ஏற்பட்டுள்ளது. அண்மையில் சில பொலிஸ் அதிகாரிகளுடனான தொலைபேசி உரையாடல்கள் வெளியாகியிருந்தன. அந்த உரையாடல்களின் பிரகாரம் பொலிஸார் தான் பாதாள தலைவர்கள் என எண்ணத் தோன்றும். பொலிஸ் அதிகாரி தான் அச்சுறுத்தப்படுகிறார். சீருடையின் கௌரவம் இதனால் பாதுகாக்கப்படுகிறதா? இளம் குழுக்களை இணைத்து சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் உருவாகி போதைப் பொருள் வலையமைப்புடன் கைகோர்த்துள்ளன. இது பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக இருப்பிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

4,5 தசாப்தங்களாக தொடரும் இந்த பேரழிவுக்கு சிக்காத நகரங்களை தேட முடியாதுள்ளது. பலியாகாத குடும்பமொன்றை தேட முடியா நிலை ஏற்பட முன்னர் இந்த பேரழிவுக்கு முடிவு கட்ட வேண்டும்.

முன்னர் போதைப்பொருட்கள் விமான நிலையத்தின் ஊடாக சிறிய பொதிகளாக எடுத்து வரப்பட்டன. இன்று கொள்கலன்களில் வருகிறது. இவ்வாறு இந்தளவு வளர்ச்சி கண்டது? போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனை ஒழிக்க இடைவிடாது தொடர்ச்சியான செயற்பாடு அவசியம். இதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம். பலரை வெளிநாடுகளில் பிடித்துள்ளோம். இன்னும் பலர் வெளிநாடுகளில் கைதாகியுள்ளனர். இன்னம் சிலர் மறைந்துள்ளனர். அவர்களை பிடிக்க வேண்டும். இங்கு இரண்டாவது அடுக்காக இருக்கும் பிரதான விநியோக வலையமைப்பை ஒழிக்க வேண்டும். முழுமையான சுத்திகரிப்பை செய்வோம்.

இந்த செயற்பாட்டில் இருந்து சமூகத்தை திசைதிருப்ப சிலர் முயலலாம். உலகில் அவ்வாறு நடந்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்களை விடுவிக்க சில நாடுகளில் மக்கள் போராட்டம் கூட நடந்துள்ளது. தமது இருப்பிற்காக பல்வேறு வகைகளில் தமது பணத்தை பயன்படுத்துகின்றனர்.இந்த செயற்பாட்டை முடக்க பல்வேறு கோணங்களில் செயற்படலாம். மக்கள் போராட்டங்கள்,அரச விரோத செயற்பாடுகளை தூண்ட ,இல்லாத பிரச்சினைளை ஏற்படுத்த மறுபக்க முன்னெடுப்புகள் இடம்பெறும்.

இதற்கு எதிராக செயற்படும் அதிகாரிகளையும் குடும்பத்தினரையும்அச்சுறுத்தப்படுவது எமக்கு வெளியில் தெரியும்.அதே போல மறைமுகமாக செயற்படும் குழுக்களும் உள்ளன.அரசின் நோக்கத்தை திசைதிருப்பும் சதி நடக்கிறது. மக்கள் ஆர்ப்பாட்டத்தை பணம் கொடுத்து மேற்கொள்ளலாம். இது குற்றவாளிகளுக்கும் அதற்கு எதிரானவர்களுக்குமான போராட்டம் மாத்திரமல்ல. அதனுடன் பிணைந்த பொறிமுறைகள் உள்ளன.

தேசிய பேரழிவில் இருந்து தேசத்தை மீட்பதற்கான செயற்பாட்டை கைவிடாமல் முன்னெடுப்போம். அதற்கான ஒன்றுபட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.